Tuesday, May 26, 2020

அனுமன்

            

               திரேதாயுகத்தில் வாழ்ந்த சிவபக்தனான குஞ்சரன் என்பவர் குழந்தை வரம் கேட்டு ஈஸ்வரனை நோக்கித் தவம்புரிந்தார். ‘சர்வலட்சணமும் கொண்ட அழகிய மகள் உனக்குப் பிறப்பாள். அவளுக்கு பிறக்கும் மகன் எனது அம்சமாக தோன்றி வலிமையும், வீரமும் கொண்டு சிரஞ்சீவியாக வாழ்வான்’ என்று ஈசன் வரமளித்து மறைந்தார். ஈசனின் அருளால் குஞ்சரனுக்கு பிறந்த மகள், அஞ்சனை என்ற திருநாமம் கொண்டு வளர்ந்தாள். மணப்பருவம் அடைந்த அஞ்சனை, கேசரி என்னும் வானர மன்னரை மணந்துகொண்டாள்.

              திருமணம் முடிந்தும் அஞ்சனைக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதனால் எந்நேரமும் ஈசனை எண்ணி கண்ணீர் வடித்தாள் அஞ்சனை. பக்தியும், நற்குணங்களும் கொண்ட அஞ்சனையின் நல்ல குணங்களை மெச்சி தர்மதேவதை அவளின் முன்தோன்றி, ‘அஞ்சனையே நீ மாலவன் வீற்றிருக்கும் திருவேங்கட மலைக்கு உன் கணவருடன் சென்று தங்கி, ஈசனை குறித்து தவம்செய். ஈசன் அருளால் எவராலும் வெல்ல முடியாத அழகிய மகனை பெறுவாய்’ என்று ஆசி கூறினாள்.


       தர்மதேவதை கூறியவாறே திருமலைக்கு சென்று கடும் தவம் இருந்தாள் அஞ்சனை. பஞ்சபூதங்களும் வியக்கும் வண்ணம் அவள் இருந்த தவம் கண்டு வாயு தேவன் மகிழ்ந்தார். ஈசனின் ஆணைப்படி அஞ்சனையின் தவத்தை மெச்சி வாயுதேவன் ஓர் அற்புதக்கனியை பரிசளித்து ஆசிர்வதித்தார். அந்த கனியை உண்ட அஞ்சனை கருவுற்றாள். மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார். சிவசக்தி அருளால் தோன்றிய அனுமன், வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், ஆஞ்சநேயன் என்று திருப்பெயர்கள் கொண்டார். ஈசனின் அம்சம் அனுமன் 

         அது மட்டுமல்ல, முன்னொரு காலத்தில் ராவணன் நந்தியை மதிக்காமல் குரங்கு முகம் என பழித்தான். அதனால் நந்தி ஒரு குரங்கால் உன் ராஜ்ஜியம் முழுவதும் அழியும் என்று சாபம் கொடுத்தார். அந்த சாபம் பலிக்கவும், ராமனுக்கு தாசனாக இருக்கவும் தோதாக வானர ரூபம் எடுக்க முடிவானது. உலகன்னை வானரத்தின் வாலாக நான் இருப்பேன் என வேண்ட, எம்பெருமான் அதற்கு ஒப்புக் கொண்டார். அதனால்தான் அனுமனின் வால் சக்தி மிகுந்ததாகவும், அழகானதாகவும் விளங்குகிறது.
         எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் ஆஞ்சனேயர் அமர்ந்திருப்பார். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். எங்கெல்லாம் ஆஞ்சநேயர் இருக்கின்றாரே அங்கே வெற்றியைத் தவிர வேறொன்றும் இராது என்பது நம்பிக்கையாகும்.



        இராமாயணம் அனுமனின்  பிறப்பிடம் கிட்கிந்தை எனக் கூறுகிறது. கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டம் கங்காவதி வட்டம், ஹம்பி அருகேயுள்ள அஞ்சனாத்திரி மலையே கிட்கிந்தை என்று பலராலும் கூறப்படுகிறது / நாசிக் அருகே இருக்கும் (30km) ஆஞ்சநேரி எனும் இடம்தான் அனுமன் பிறந்த இடமாகும். இங்குதான் அனுமன் தனது பால்ய காலத்தை கழித்ததாக இன்றளவும் இங்குள்ள மக்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.


   இவர்களின் குல தெய்வம் வாயு (பஞ்சபூதங்களில ஒன்று) ஆவர், இவரே அனுமனுக்கு தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் அனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார். இராமாயணம் தவிர மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் அனுமனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. அனுமன் இராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இராமனின் தொண்டனாக விளங்கியவர். அனுமன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்தவர். பிற்காலத்தில் வட இந்தியாவில் அனுமனை சிவனின் அவதாரமாகவும் கருதுபவர்கள் உண்டு. வைணவக் கோயில்களில் அனுமாருக்கு தனி சன்னதி உண்டு. அனுமாரை வைணவர்கள் திருமாலின் சிறிய திருவடி என்று பேற்றுகின்றனர்.

     அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர் என்கின்றனர். ராமாயணத்தில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்கின்றன புராணங்கள். எனவே ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் இணைந்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
       வால்மீகியின் ராமாயணத்தின்படி, தனது குழந்தைப் பருவத்தில் ஒரு நாள் காலையில், அனுமனுக்குப் மிகுந்த பசி ஏற்பட்டது. வானில் சிவப்பு நிறத்தில் ஞாயிறு (விண்மீன்). உயர்ந்து வருவதைக் கண்டார். அது ஒரு பழுத்த பழம் என்று அதை தவறாகப் புரிந்துகொண்டு, அதைச் சாப்பிட வானில் தாவினார். இந்து புராணங்களில் சொல்லப்படும் தேவர்களின் தலைவனான இந்திரன் அனுமனைத் தடுத்து தனது வஜ்ராயுதத்தால் அவரது முகத்தில் தாக்கினார். 
            அது அனுமனை அவரது தாடையில் தாக்கியது, உடைந்த தாடையுடன் அவர் இறந்து பூமியில் விழுந்து விடுகிறார். இதனால் அவரது தந்தை, வாயு (காற்று), (பிரிவு 4.65 இல் ராமாயணம் கூறுகிறது), வருத்தமடைந்து. காற்றை நிறுத்தி விடுகிறார். காற்று பற்றாக்குறை காரணமாக அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் துன்பத்தை உருவாக்கியது. அனைவரும் இந்தப் பிரச்சினையை சிவனிடம் கொண்டுச் செல்கின்றனர்.

         அவர் தலையிட்டு அனுமனை உயிர்ப்பிக்க, வாயு மீண்டும் அனைத்து உயிர்களுக்கும் காற்றினை அளித்தார். இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டதனால் அனுமானின் உடலும் அதைப் போலவே மிகவும் வலிமையாக இருக்கும் என கடவுள் வரம் அளித்தார். மீண்டும் அவருக்கு வஜ்ராயுதத்தால் தீங்கு ஏற்படாது என வாயு வரம் அளித்தார். இந்திரனுடன் சேர்ந்து மற்ற கடவுளான அக்னிதேவனும் அனுமனுக்கு நெருப்பினால் எவ்வித திங்கும் ஏற்படாது எனவும், வருணன் நீரினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், வாயு காற்றினால் எவ்வித திங்கும் ஏற்படாது எனவும், வரமளித்தனர். கடவுள் பிரம்மா அனுமன் தன்னால் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லலாம் எனவும் அவரை எவரும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் வரமளித்தார். கடவுள் விஷ்ணு "கதா என்னும் ஆய்தத்தை வழங்கினார். எனவே இந்த வரங்களினால் அனுமனை ஒரு சிரஞ்சீவியாகவும், தனித்துவமான சக்திகளையும் பலத்தையும் கொண்டவரகவும் மாறுகிறார்.

         இந்த நிகழ்வுக்குப் பிறகு சிறிது காலம் கழித்து, முனிவர்களின் யாகத்தைக் கலைப்பதும், மரத்தின் மீது ஏறிக் கொண்டு அவர்கள் மீது கல்லை வீசுவதும் என, அனுமன் தனது சக்திகளை முனிவர்களின் மீது சிறு சிறு சேட்டைகளக பயன்படுத்தத் தொடங்குகிறார்.

          அந்த வனத்தில் இருந்த முனிவர்களுக்கு மாருதியின் அவதார நோக்கம் தெரியும் என்பதால் சிறு சாபம் ஒன்று கொடுத்தனர். அதன்படி பவன குமாரருக்கு தனது பலம் என்ன என்பது தெரியாமல் மறந்து போனது. மாருதியின் கல்விக்கான நேரம் வந்த போது, சூரியனே கல்வியில் மிகச் சிறந்தவர் என்று எல்லாரும் சொல்லக் கேட்டு, அவரையே தனது குருவாக வரித்தார் அனுமன். 
      சூரியனின் சுழற்சி வேகத்துக்கு ஈடு கொடுத்து நடந்தபடியே நால்வகை வேதங்கள், தர்மசாஸ்திரங்கள், புராணங்கள் என எல்லாம் கற்றுத் தேர்ந்தார். அதோடு மட்டுமல்லாமல் வியாகர்ணம் எனப்படும் சமஸ்கிருத இலக்கணத்தை மிக நன்றாகக் கற்று பண்டிதர் எனப் பெயர் பெற்றார். கல்விக்காலம் முடிந்ததும் தனது அவதார நோக்கத்தை அறிந்து கொண்டார் அவர். ராமபிரான் வரும் வரையில் காத்திருப்பதுதான் தன் கடமை என உணர்ந்து கொண்டார். 
             அந்த நேரத்தில் சுக்ரீவன் மனைவியையும், நாட்டையும் இழந்து காட்டில் சுற்றிக் கொண்டிருந்தான். அவனது அமைச்சனாக, வழிகாட்டியாக பணியில் அமர்ந்தார் அனுமன். இராமனும் இலக்குவனும்  சுக்ரீவனின் இருப்பிடத்திற்கு அருகாமையில் வந்து கொண்டு இருக்கையில், அவர்கள் உண்மையில் யாரெனக் கண்டுகொள்ள, சுக்ரீவன் அனுமனை அனுப்புகிறான். அனுமன் அந்தண வேடத்தில் இராம இலக்குவனை அடைந்து அவர்கள் யாரென வினவுகிறான். இராமன் தாங்கள் யாரெனக் கூறத் தொடங்கியதுமே, அனுமன் இராமன் காலில் வீழ்ந்து தன்னை அனுமன் என அறிவிக்க, இராமன் அனுமனைக் கட்டித் தழுவிக் கொள்கிறார். அப்போது தொடங்கும் இராமன் - அனுமன் நட்பு எப்போதும் என்றென்றும் நிலைத்து திகழ்கிறது. அனுமனின் இதயத்தில் இராமன் எப்போதும் ஒளி வீசித் திகழ்கிறார்.


            சுந்தரகாண்டத்தின் கதாநாயகனான அனுமன், சீதையின் இருப்பிடத்தை சம்பாதி எனும் பட்சிராஜன் (கழுகு) மூலம் அறிந்து இலங்கைக்குச் செல்ல ஆயத்தமானார். 
           ஜாம்பவான் மாருதியின் பலத்தை நினைவுபடுத்த அதன் பிறகு அவர் கடலைத் தாண்டியதும், அனுமன் இராமனை பிரிந்து தவிக்கும் சீதையைக் காண வான் மார்க்கமாக கடல் கடந்து இலங்கைக்கு சென்றதாக இராமாயணம் கூறுகிறது. சீதையை அசோக வனத்தில் சந்தித்து, இராமன் சீதையைத் தேடி வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியையும், இராமனின் அடையாளமாக அவரது கணையாழியையும் அனுமன் தருகிறார். பின்னர் சீதையைச் சிறைப் பிடித்து வைத்திருக்கும் இலங்கை வேந்தன் இராவணனை அவனது அரசவையில் சந்தித்து, சீதையை விடுவிக்குமாறும் இல்லாவிட்டால் இராமன் போர் தொடுக்க வேண்டி இருக்கும் என்பதனையும் தூதுவனாகத் தெரிவிக்கிறார். தூதுவனை மதியாத இராவணன், அனுமனின் வாலில் தீ வைக்க, அங்கிருந்து தப்பிய அனுமன் இலங்கைத் தலைநகரத்தையே தன் வாலில் இருந்த தீயால் எரிந்து சாம்பலாகும்படி செய்து விட்டுத் திரும்புகிறார். இலங்கையில் இருந்து திரும்பியவுடன் இராமனைச் சந்தித்து, "கண்டேன் சீதையை" என்கிற நற்செய்தியையும், இராவணன் சமாதானத்திற்கு உடன்படாததையும் தெரிவிக்கிறார்.அனுமன் "சொல்லின் செல்வன்" எனவும் அழைக்கப்படுகிறார். பின்னர் போர் மூள்கிறது. 
          இராமயணத்தில் பல இடங்களில் அனுமன் தனது உருவினை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவராக சொல்லப்படுகிறது. உருவினை மாற்றிக் கொள்ளும் சித்திகளை அனுமன் தனது இளமைப் பிராயத்தில் சூரியக் கடவுளிடம் இருந்து பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
         போரில் இராமனது தம்பி இலக்குவன் காயங்களுடன் மூர்ச்சை அடைய, இலக்குவனைக் காப்பாற்ற சஞ்சீவினி மலையில் இருந்து மூலிகை மருந்தினைக் கொண்டு வருவதற்காக அனுப்பப் படுகிறார். இதை அறிந்த இராவணன் அனுமனுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறான். அனுமன் அவற்றைக் கடந்து சஞ்சீவினி மலையை அடைந்தார். ஆனால் அங்கு குறிப்பிட்ட மூலிகையினை அவரால் அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை. அன்றைய தினம் முடிவடையும் முன் மூலிகையினைக் கொணர்ந்தால் தான் இலக்குவனைக் காப்பாற்ற இயலும் என்கிற தறுவாயில், அனுமன் பெரியதோர் உருக்கொண்டு, சஞ்சீவினி மலையினை அப்படியே அடியோடு பெயர்த்தெடுத்து, வானத்தில் பறந்து போர்க்களத்தினை வந்தடைகிறார். பின்னர் மலையில் இருந்து மூலிகை மருந்து இலக்குவனுக்குத் தரப்பட, இலக்குவன் உயிர் பிழைக்க, இராமன் பெருமகிழ்ச்சி கொண்டு, அனுமனை கட்டித் தழுவுகிறார். அனுமனைத் தனது தம்பிகளில் ஒருவராக அன்பொடு அறிவிக்கிறார்.
          அனுமன் சஞ்சீவினி மலையைத் தூக்கிக் கொண்டு அயோத்தி வழியே வானத்தில் பறந்து வருகையில் இராமனது தம்பி பரதன் யாரோ அரக்கன் ஒருவன் அயோத்தியைத் தாக்க வருகிறான் என்று நினைத்துக் கொண்டு அனுமனை நோக்கி அம்பினைத் தொடுகிறார். அம்பினில் இராமன் பெயர் இருப்பதைக் கண்டு, அனுமனைச் சும்மா இருக்க, அவ்வம்பு அனுமனது காலைத் துளைக்கிறது. உடனே வானத்தில் இருந்து கீழிறங்கி, பரதனிடம் அவன் தமையன் இலக்குவனைக் காக்கவே மலையைத் தூக்கிச் செல்வதாகச் சொன்னதைக் கேட்டதும் பரதன் தன் தவற்றை நினைத்து வருந்துகிறார். பதிலுக்குப் பரதன் தான் ஒரு அம்பினை இலங்கையை நோக்கி செலுத்தினால் அதில் அனுமன் அமர்ந்து எளிதாக இலங்கையை அடையலாமே என்கிறார். அனுமனோ அதை மறுத்துவிட்டு, அடிபட்ட காலுடனே இலங்கையை நோக்கி விரைகிறார்.

          இராவண வதம் முடித்து இராமன் முதலானோர் அயோத்தி திரும்பி இராமன் முடி சூட்டிய பின், தனக்கு உதவி செய்தவர்களுக்கு தக்க பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது இராமன் அருகே யாதொரு பரிசினையும் எதிர்பாராத அனுமன் வர, இராமன் அனுமனை ஆரத் தழுவிக்கொண்டு, அனுமன் செய்த உதவிகளுக்கெல்லாம் எப்பரிசினாலும் ஈடுகட்ட முடியாது எனப் புகழ்கிறார். அக்கணம் சீதையோ ஏதாவது ஒரு பரிசினை தங்கள் நினைவாக அனுமனுக்கு தர வேண்டுமன விழைந்து, தன் கழுத்தில் அணிந்திருந்த இரத்திங்கள் பதித்த விலை உயர்ந்த மாலையைப் பரிசளிக்கிறார். அதை பெற்றுக்கொண்ட அனுமன், அந்த மாலையில் பதித்திருந்த இரத்தினங்களை வெளியே எடுத்து அதில் இராமர்-சீதை தெரிகிறார்களா எனப் பார்க்கிறார். ஏனெனில் இராமர் சீதையை விட அவருக்கு உயர்வானது வேறொன்றுமில்லை. இதை அறியாத ஒரு சிலர் அனுமனைப் பார்த்து நகைக்க, அனுமனோ அனைவரும் அறியும் வண்ணம் தனது மார்பினைத் திறந்து அதில், தன் இதயத்தில் இராமர் சீதை வீற்றிருப்பதைக் காட்டுகிறார்.

         இராமயணத்தைப்போல மகாபாரதத்தில் அனுமன் முக்கிய கதைப்பாத்திரம் இல்லை. ஆனால் பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்கு ஒரு வகையில் அண்ணன் உறவு வருகிறது. பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும்போது, காட்டு வழியே பீமன் பயணிக்கும்போது, அங்கே வயோதிக குரங்கு ஒன்று படுத்துக் கொண்டிருக்க, அதன் வாலோ நீண்டு பீமன் நடந்து செல்லும் பாதையை அடைத்துக் கொண்டிருந்தது. பீமன் அதன் வாலை தள்ளி வைத்து விட்டு செல்லலாம் என எண்ணி, வாலைத் தூக்க யத்தனித்தான். ஆனால் சிறந்த பலசாலி எனப்பெயர் பெற்ற பீமனாலேயே அக்குரங்கின் வாலினை அப்புறப்படுத்த இயலவில்லை. பின்னர் பீமன், அது சாதரணக் குரங்கில்லை என உணர்ந்து, அக்குரங்கிடம் மிகுந்த மரியாதையுடன் யாரென வினவிட, அனுமன் தான் யாரென்பதை பீமன் அறியச் செய்கிறார்.

      குருக்ஷேத்திரப் போரில், அர்ஜூனனின் தேரில் பறக்கவிடப்பட்டிருந்த கொடியில் அனுமனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. இது மானசீகமாக தேரின் பலத்தினைக் கூட்டியதாகச் சொல்வார்கள். கண்ணன் போர்க்களத்தில் பகவத் கீதையினை அர்ஜூனனுக்கு உபதேசித்தபோது, அனுமனும் கொடி வழியாக கேட்டதாகச் சொல்லப்படுகிறது. போர் நிறைவடைந்தபின், அர்ஜூனனும், கண்ணனும் தேரில் இருந்து கீழே இறங்கியபின், கண்ணன் அனுமனிடம் இதுவரை தேரின் கொடியாக இருந்தமைக்கு நன்றி சொல்லிட, உடனே அனுமன் தன் உருவினைக் காட்டி, கண்ணனை வணங்கி விட்டு, கொடியில் இருந்து மறைந்து விடுகிறார். அனுமன் மறைந்தவுடனேயே, தேர் எரிந்து சாம்பலாகி விடுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற அர்ஜூனனைப் பார்த்து கண்ணன், "அர்ஜூனா, இதுவரை போரினில், இத்தேரின் மேல் வீசப்பட்ட அனைத்து கொடிய பாணங்களையும் தாங்கி நின்றது என்றால், அதற்கு நானும் அனுமனும் இத்தேரினில் இருந்ததுவே காரணம். இல்லாவிட்டால், இத்தேர் எப்போதோ அப்பாணங்களின் சக்தியினால் எரிந்து போயிருக்கும்" என்றார்.

          சனீஸ்வரனிடம் ஆஞ்சநேயர் ஒரு வரம்கேட்டார், "உங்களது ஆட்சி மனிதர்கள் மீது இருக்கும் காலத்தில், அதீத துன்பத்தால் என்னை வந்து சரணடைபவர்களுக்கு நீங்கள் அருள் செய்ய வேண்டும். அவர்களுக்கு கடும் துன்பங்கள் கொடுக்கக்கூடாது என்று சனீஸ்வரனிடம் வேண்டினார். ஆஞ்சநேயர் கேட்டுக் கொண்டதற்கு சனீஸ்வர பகவான் சம்மதித்து, அருள் செய்வதாக கூறினார். அதனால், ஏழரை சனி, அஷ்டமச் சனி உட்பட சனீஸ்வர பகவானின் எந்த ஒரு பிரச்னையால் வாடும் நபர்களாக இருந்தாலும், அவர்கள் ஆஞ்சநேயரை சரணடைந்தால் துன்பங்கள் விலகி ஓடும்.


பக்தனிடம் தோற்ற ராமன் மற்றும் ஆஞ்சநேயர்


ஆஞ்சநேயரின் பரம பக்தன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு வினோத ஆசை இருந்தது. அதாவது, ஆஞ்சநேயருடன் சொக்காட்டம் ஆட வேண்டும் என்பது தான் அவரின் ஆசை.

இதனால் தினமும் ஆஞ்சநேயா நீ என்னுடன் சொக்காட்டம் ஆட வர வேண்டும் என பிரார்த்திக் கொண்டிருந்தான். பக்தனின் இந்த வேண்டுகோளை ஏற்று அவர் முன் ஆஞ்சநேயர் தோன்றினார். அவனுடன் சொக்காட்டம் ஆடவும் ஒப்புக் கொண்டான்.

        ஆனால் பக்தனிடம் மாருதி ஒரு நிபந்தனை விதித்தார். “பக்தனிடம், பக்தா நான் விளையாட்டில் விட்டுக் கொடுக்க மாட்டேன். தீவிரமாக விளையாடுவேன். பின்னர் நீ தோற்றுவிட்டால் அதற்காக வருந்தக் கூடாது.” என்றார். பக்தனும் சம்மதித்தான்.

        இருவரும் விளையாட துவங்கினார். ஆஞ்சநேயர் ஒவ்வொரு முறையும் ஆடும் போது, ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூறியபடியே காய்களை உருட்டினார். அந்த பக்தனோ, ‘ஜெய் அனுமான்’ என்ற படி காய்களை உருட்டினான்.

       அந்த விளையாட்டில் ஒவ்வொரு முறையும் அந்த பக்தனே வெற்றி பெற்றான். அனுமனோ சரி அடுத்தமுறையாவது ஜெய்த்துவிடலாம் என்ற முனைப்பில் மீண்டும் மீண்டும் விளையாடினார். ஆனால் வெற்றியோ பக்தன் பக்கம் மட்டுமே இருந்தது.

       தற்போது பக்தனுக்குப் பதிலாக, ஆஞ்சநேயர் மனவருத்தத்தில் ஆழ்ந்தார். ராமனிடம் “சுவாமி, நான் உங்கள் திருநாமத்தை ஒவ்வொரு முறை உச்சரித்தும் எனக்கு தோல்வியா?” என புலம்பினார்.

        அஞ்சனை மைந்தன் முன் தோன்றிய ராமன், “அனுமன்... நீயோ என் பக்தன். அதனால் என் சக்தி உன்னுள் இணைந்துள்ளது.
ஆனால், அவனோ உன் பக்தன், ஆதலால் அவனில் நம் இருவரின் சக்தியும் இணைந்து விடுகிறது. இது தான் அவனின் வெற்றிக்குக் காரணம்” என்றார்.

நெகிழ்ந்து போன ஆஞ்சநேயர் பக்தனுக்கு ஆசி வழங்கிவிட்டுச் சென்றார்.


ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்.

ஏன் வடை மாலை சாத்துகிறோம் :

           அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது. இது குறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார். ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை. அவர், அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் , ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார். "ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்..."இழுத்தார் அன்பர். "வாயுபுத்திரனைப் பத்தியா... கேளேன்" என்றார் ஸ்வாமிகள். "ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம் என்றார். பெரியவா மெளனமாக இருக்கவே... அன்பரே தொடர்ந்தார்: "அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள், ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?" என்று கேட்டு விட்டு பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர்.

          ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார். "பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா...' என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள். அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் . சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும். சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அதுவும் எப்படி ? பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.

      அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயுபுத்திரன் அல்லவா ? அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.

         அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார். இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.
        
           இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது. இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன். வடையாகட்டும்... ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.
       வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது. தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சாரதி வழிபடுகிறார்கள்.


       எது எப்படியோ... அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன. அது உப்பாக இருந்தால் என்ன... சர்க்கரையாக இருந்தால் என்ன? மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி" என்று சொல்லி விட்டு, இடி இடியெனச் சிரித்தார் மஹா பெரியவா.


சீதையால் செந்தூரத்தில் மூழ்கிய அனுமன்:

         ஒரு நாள் இரவு அரண்மனையில் சீதாப் பிராட்டியார் தனது கணவரான ஸ்ரீராமர் இருக்கும் அறைக்குள் நுழைந்தார். அவருடனேயே ஸ்ரீராமரின் அனுக்கத் தொண்டருமான அனுமனும் நுழைய முற்பட்டார். அவரை ராமர் தடுத்தார். சீதா தேவியைப் போலவே தங்களின் மீது அன்பு வைத்திருக்கும் தன்னை மட்டும் ஏன் தடுக்கிறீர்கள்? என அனுமன் கேட்டார். “சீதா தன் நெற்றியில் செந்தூரத்தை இட்டுக்கொண்டிருப்பதால் உள்ளே அனுமதித்ததாக”  கூறினார்.

       இதைக் கேட்டு வெளியில் வந்த அனுமன், மறுநாள் சீதா தேவி தன் நெற்றியில் செந்தூரம் இடுவதைக் கண்டு அதற்கான காரணத்தைக் கூறுமாறு சீதையிடம் கேட்டார். அனுமனின் களங்கமில்லா மனதை அறிந்த சீதை “தன் நெற்றியில் செந்தூரம் இட்டுக்கொள்வதால் தன் கணவரும், அனைவருக்கும் பிரபுவான ஸ்ரீராமரின் ஆயுள் நீளும்” எனக் கூறினார். இதைக் கேட்ட அனுமனும் உடனே அயோத்தியின் கடைவீதிக்குச் சென்று ஒரு கடைக்காரரிடம் செந்தூரம் தருமாறு கேட்டார். அந்தக் கடைக்காரரும் ஒரு டப்பாச் செந்தூரத்தைக் கொடுத்தார். இது பத்தாது என்றெண்ணிய அனுமன் அந்தக் கடைக்குள் புகுந்து செந்தூர மூட்டைக்குள் கையை விட்டு, தன் முகம் மற்றும் இதரப் பகுதிகளில் பூசிக்கொண்டார்.மேலும் அச்செந்தூர மூட்டையைத் தரையில் கொட்டி, அதில் புரண்டு தன் உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக்கொண்டார். அக்கோலத்துடனேயே அனுமன் அயோத்தியின் அரண்மனைக்குச் சென்றார்.

      செந்தூரத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டு அரண்மனைக்கு வந்த அனுமனைக் கண்ட ஸ்ரீராமர் சிரித்துக்கொண்டே அதற்கான காரணத்தைக் கேட்டார். “நெற்றியில் செந்தூரத்தை இட்டுக்கொள்வதால் தங்களின் ஆயுள் நீடிக்கும்” என்று சீதா தேவிக் கூறியதாகவும், சிறிய அளவில் இடும் செந்தூரத்திற்கே தங்கள் ஆயுள் நீண்டால், உங்கள் மீது அளவற்ற பக்தி கொண்டிருக்கு நான் என் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக்கொள்வதால் மேலும் உங்களுக்கு பலகாலம் ஆயுள் நீடிக்கும் அல்லவா என்றார் அனுமன். அனுமனின் இந்த பிரதிப் பயன் கருதாப் பக்தியை அங்கிருந்தோர் அனைவரும் போற்றினர்.  

          அனுமனைப்போல் எவ்வித எதிர்பார்ப்பின்றி இறைவன் மீது செலுத்தப்படும் பக்தியே உண்மையான பக்தி என்பது இக்கதையின் சாராம்சமாகும்.

          சிரஞ்சீவியான அனுமார் இன்றும் நம்முடன் இருக்கிறார். அவரது புகழ்பரப்பும் அனுமன் சாலீஸா பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. ராமநாமம் ஜெபிப்போம் அனுமன் அருள் பெருவோம்.






Saturday, May 23, 2020

தமிழ்க் கடவுள் முருகன்


        
       "முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும். இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்கு தம்பி. 



       தாரகன் என்ற அசுரன் பிரம்மதேவரிடம் சிவபெருமானின் புதல்வனைத் தவிர வேறு எவராலும் தமக்கு அழிவு நேரக் கூடாது என்று வரம் பெற்றான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள் சிவபெருமானின் தியானத்தைக் கலைக்க காமதேவனை அனுப்பினர். அப்போது சிவபெருமான் தம் மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி காமதேவனை தகனம் செய்தது. பிறகு அதை தாங்கிய வாயு பகவான், சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார், அந்த தீப்பொறி சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். இதனால் அவர் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றார். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார்.  அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாக கட்டித் தழுவி அவர்களை ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்தியோஜதம் மற்றும் ஆதோமுகம் ஆகிய ஆறு முகங்களுடன் ஒரே உருவமாக மாற்றினார். ஆறு முகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவனைப்போலவே முகத்திற்கு மூன்று கண்கள் என, ஆறுமுகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பதினெட்டு கண்களை உடையவர். 



          குறிஞ்சி நிலக்கடவுள், மலையும் மலை சார்ந்த இடங்களின் கடவுள் முருகன்.  மனித இனம் முதன் முதலில் தோன்றிய இடம் குறிஞ்சி நிலமாகும். ஆகவே முதன் முதலில் மக்கள் குறிஞ்சி நிலத்திலேயே தெய்வ வழிபாடு தொடங்கினார்கள். ஒரு குழந்தை வடிவம் படைத்து அதை கடவுளாக வழிபாடு செய்தது முருகன் வழிபாடு என சொல்கிறார்கள். முருகன் தமிழ்க் கடவுள். முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அகத்தியருக்கு அறிவுறுத்தினான் என்பது வரலாறு. மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான். 



        முருகனை தகப்பன் ஸ்வாமி அல்லது ஸ்வாமினாதன் என்பார்கள். அதாவது தந்தைக்கே குருவானவர் என்று அர்த்தம். ஸ்வாமிமலைக்கு அப்படி பெயர் வந்ததின் காரணக் கதை ஒன்று உண்டு. ஒருமுறை கைலாயத்துக்குச் சென்ற முருகனை பிரும்மா அவமதித்து விட்டார். ஆகவே அவருக்கு பாடம் புகட்ட எண்ணிய முருகன் பிரும்மாவிடம் பிரணவ மந்திரமான ஓம் என்பதற்கு அர்த்தம் தெரியுமா என்று கேட்டார். ஆனால் பிரும்மாவினால் அதற்கு பதில் கூற முடியாததினால் அவர் தலையில் ஓங்கி அடித்த முருகன் அவரை பிடித்து சிறையிலும் அடைத்து விட்டார் (ஆதி சங்கரரின் ஸ்ரீ சுப்பிரமணிய புஜாங்கம்- ஸ்லோகம் 12). பிரும்மா சிறை வைக்கப்பட்டதினால் படைப்புக்கள் நின்று விட சிவபெருமானே முருகனை சந்தித்து அதன் விளக்கத்தை தனக்குக் கூறுமாறு முருகனிடம் கேட்க, சிவபெருமானிடம் அவர் தனக்கு சிஷ்யனாக இருந்து அதைக் கேட்க சம்மதித்தால் அதன் அர்த்தத்தைக் கூறுவதாகக் கூறினார். அதை ஏற்றுக் கொண்ட சிவப்பெருமான் சிஷ்யனாக மாற குருவான முருகன் அதன் அர்த்தத்தைக் கூறினார். (குமரகுருபரர், கந்தர்கலை வெண்பா 90 –98). ஆகவே அவரை ஸ்வாமினாதன் அல்லது குருநாதன் என அழைத்து அவர் தங்கி இருந்த மலைவீட்டை ஸ்வாமி மலை என அழைத்தார்கள் (அருணகிரிநாதர், திருப்புகழ் ).


       முருகப்பெருமானின் அவதாரத்தின் நோக்கமே அசூரன் சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பது. சக்தியின் சிலம்பில் இருந்து வெளிவந்த நவ சக்தி எனப்பட்ட வீரபாகுவும், அவருடைய எட்டு சகோதரர்களும் ஒரு லட்ஷ வீரர்களுடன் வெளி வந்தார்கள். தன்னுடைய பெற்றோர்களின் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு யுத்தத்திற்கு முருகன் புறப்பட்டு சென்றபோது அந்த நவ சக்திகளும், ஒரு லட்ஷப் படையினரும் அவருடன் சென்றார்கள்அன்னை பார்வதி முருகப்பெருமானுக்குத் தனது சக்திகளை உள்ளடக்கிய வேல் ஒன்றைப் பரிசாக வழங்கினார். அந்த வேலைக் கொண்டு முருகன் சூரபத்மனுடன் போரிட சென்றார். சூரபத்மனை அழித்து, அவனை மயில் மற்றும் சேவலாக மாற்றி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டு அருளினார்.

         சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். அதனையொட்டி, முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையைத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். அதன்தொடர்ச்சியாக, முருகப்பெருமான் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

  தேவர்களின் படைத் தலைவரான முருகன் மலைவாழ் பெண் வள்ளியின் கரத்தைப் பிடித்தது இன்னொரு கதை ஆகும். வள்ளியை மணந்ததின் மூலம், தான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை சர்வ வல்லமை பெற்ற கடவுளான முருகன் அனைவருக்கும் காட்டினார். நம்பிராஜன் என்ற வேடனால் வளர்க்கப்பட்ட வள்ளி, முருகன் மீது மையல் கொள்ள, அவளை தன் வசப்படுத்தி அவளது காதலை அடைய வேண்டும் என்று எண்ணிய முருகன் ஒரு வேடவர் போல, மரத்தைப் போல, ஒரு கிழவரைப் போல பல ரூபங்களைக் எடுத்துக் கொண்டார். ஆனால் தன்னுடைய சகோதரரான கணேசரின் துணையை பெற்றுக் கொள்ளும்வரை அவரால் அவளை அடைய முடியவில்லை. அவருடைய மூத்த சகோதரர் ஒரு யானையின் உருவில் வந்து வள்ளியை பயமுறுத்தி முருகனை ஏற்றுக் கொள்ள வைத்தார். திருத்தணியில் அவர்களது திருமணம் நடைபெற்றது. 

      வள்ளி வலது பக்கத்திலும், தேவசேனா அவருடைய இடது பக்கத்திலுமாக காட்சி தருகிறார்கள். அவருடைய வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாகவும் இருந்தாலும், வள்ளியின் கையில் உள்ள தாமரை மலரோ , இல்லை தேவசேனாவின் கையில் உள்ள லில்லிப் பூவோ வாடவில்லை. அந்த இரண்டு தெய்வீக பெண்களுடனான திருமணத்தின் மூலம் முருகன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட மற்றும் காதல் திருமணம் என்ற இரண்டையுமே அங்கீகரிப்பதைக் காட்டுகிறது. 

         முருகனை வணங்கினால் பல கடவுளரை வணங்கி அடையும் பயன்களை எல்லாம் நாம் ஒருங்கே பெறலாம். மகனுக்குச் செய்யும் சிறப்பால், தந்தை தாயாகிய சிவபிரானும் உமாதேவியும், தம்பியைப் போற்றுதலால் சகோதரனாகிய விநாயகரும், மருமகனை வழிபடுதலால் மாமனாகிய திருமாலும், தலைவனை வணங்குதலால் தேவரும், முனிவரும் ஆகிய அனைவரும் மகிழ்ச்சி அடைவர். முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். 

  1. சிவபெருமானுக்குத் தகுந்த மகன்
  2.  கார்த்திகைப் பெண்கலால் வளர்க்கப்பட்டவர்
  3. கணேஷா எனும் வினாயகரின் அன்புச் சகோதரர்
  4. தேவர்களின் படைத் தலைவர்
  5. அசுரர்களை அழித்தவர்
  6. தேவசேனாவின் கணவர்
  7. வள்ளியின் அன்புக்குரியக் கணவர்
  8. மலை வாழ் கடவுள்
  9. சிவபெருமானுக்கே குருவானவர்
  10. பந்தங்களைத் துறந்தவர்
  11. சங்கக் கடவுள்
  12. அகஸ்தியருக்கு ஆசிரியரானவர், இரண்டாம் சங்கத்தின் தலைவர்
  13. ஐந்து பெரும் கடமைகளை செய்பவர்
  14. அறியாமை மற்றும் செருக்கை அகற்றுபவர்
  15. அழகும், இளமையும் நிறைந்தவர்

         கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானின் விசேட தினமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி மாத விசாக நட்சத்திர தினம் இவரது ஜென்ம நட்சத்திர தினமாக கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமான் சூரபதுமன் என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி கந்த சஷ்டி என்னும் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் மிக முக்கியமான விழா ஆகும்.

       கந்தபுராணம் என்னும் பாடற்தொகுதி கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இது முருகப்பெருமானின் வரலாற்றை எடுத்து உரைக்கிறது. சங்ககால இலக்கியமான திருமுருகாற்றுப்படை, முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவனது ஆறுபடை வீடுகளையும் பாடும் காவியம் ஆகும்.

       மேலும் சண்முக கவசம்திருப்புகழ்கந்தர் கலிவெண்பாகுமரவேல் பதிற்றுப்பத்தந்தாதிசஷ்டி கவசம்கந்தர் அனுபூதி போன்ற நூல்களும் முருகனின் பெருமை சொல்வன.

  • வேலை வணங்குவதே வேலை.
  • சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
  • வயலூர் இருக்க அயலூர் தேவையா?
  • காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
  • அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
  • முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
  • சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
  • கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
  • கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
  • பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
  • சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
  • செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
  • திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
  • வேலனுக்கு ஆனை சாட்சி.
  • வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
  • செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
  • கந்தன் பாதம் கனவிலும் காக்கும்
  • கந்தசட்டி கவசம் ”விந்து விந்து மயிலோன் விந்து, முந்து முந்து முருகவேள் முந்து”

        தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் பிற இடங்களிலும் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் நடைபெறும் பல்வேறு வகையான வழிபாடுகள், இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:
  • காவடி எடுத்தல்
  • அலகு குத்துதல்
  • பால்குடம் எடுத்தல்
  • முடி இறக்குதல் (மொட்டை போட்டுக் கொள்ள நேர்ந்து அதன்படி செய்தல்)
  • பாத யாத்திரை

      "முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன்" என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகின்றார்.


பக்தர்கள்:


1. அகத்தியர்
                     முதலாம் சங்கத் தலைவரான அகஸ்தியர் முருகனின் சிஷ்யர் ஆவார். வடக்கில் இருந்து தெற்குப் பகுதிக்கு வந்த அந்த முனிவருக்கு முருகனே தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்தாராம். (அருணகிரிநாதர் , சேவல் விருத்தம் , ll 14 – 16). முருகனே அகஸ்தியருக்கு ஆசிரியராகவும், உபதேசம் செய்தவராகவும் இருந்துள்ளார் (தொட்டிகலை சுப்ரமணிய முனிவர் - தணிகை திருவிருத்தம்).

2. நக்கீரர்
                நக்கீரரும் அவருடன் 999 புலவர்களும் கார்க்கிமுகி என்ற பூதத்தினால் சிறை வைக்கப்பட்டு உண்ணப்பட இருந்த நிலையில், முருகனைப் போற்றும் நக்கீரர் திருமுருகாற்றுப் படையை பாட, முருகன் உடனே அங்கு வந்து அந்த பூதத்தைக் கொன்று அங்கிருந்த ஆயிரம் பேர்களையும் விடுதலை செய்தார். ஆறுமுகனின் அருள் இல்லை என்றால் அவர்கள் அனைவருமே அந்த பூததினால் கொல்லப்பட்டு இருப்பார்கள்.



3. ஔவையார்
                       பால முருகனையும் தமது தெய்வக்குழந்தையாகவே கருதி அன்பும், பக்தியும் கொண்டிருந்தார். போகும் வழியில் ஓர் அடர்ந்த காடு, அவர் நெடுந்தூரம் நடந்து வந்திருந்ததால் களைப்படைந்திருந்தார். பசியும் சேர்ந்து அவரை வருத்தியது. அருகில் நின்ற நாவல் மர நிழலில் அவர் அமர்ந்தார். அந்த நாவல் மரத்தின் மேல் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான். சிறுவன் நன்கு பழுத்த நாவல் பழங்களைப் பறித்து மண்ணில் வேகமாகப் போட்டான். மண்ணில் கிடந்த நாவல் பழங்களை ஒளவையார் ஒவ்வொன்றாகக் கையில் எடுத்தார். அவற்றில் நிறைய மண் ஒட்டி இருந்தது. அந்த மண்ணைத் துடைப்பதற்காக ஒளவையார் ‘ஃபூ..... ஃபூ’ என்று ஊதினார். ஒளவையார் பழத்தை ஊதுவதை மரத்தின் மேலிருந்த சிறுவன் கண்டான். 'பாட்டி....! பழம் சுடுகிறதா? நன்றாக ஊதிச் சாப்பிடுங்கள்! என்று கூறினான்.. அப்போதுதான் ஒளவையாருக்குச் ‘சுட்ட பழம் எது? சுடாத பழம் எது?’ என்பது புரிந்தது. ‘முருகன்தான் ஆடு, மாடு மேய்ப்பவன் போல் வேடமிட்டு வந்து தனது கர்வத்தைப் போக்கினான்’ என்பதை அறிந்த ஒளவையார் மனம் தெளிந்தார். முருகனை வணங்கினார்.

         தனக்கு பழம் கிடைக்கவில்லையே என்று கோபமுற்ற முருகப் பெருமான் அம்மையையும் அப்பனையும் விட்டு விட்டு தனக்கென ஒரு இடத்தைத் தேடி புறப்பட்டார். தமிழ் பாட்டி ஔவையார் முருகப் பெருமானின் முன் வந்து 'முருகா சின்னப் பழத்திற்காக சினம் கொள்ளலாமா?. ஆறுவது சினம் அல்லவா' எனக் கூறி விட்டு 'தாயிடமும் தந்தையிடமும் செல்லலாம் வா' என்று வாஞ்சையுடன் அழைத்தார்.

4. அருணகிரிநாதர்
                              முருகப் பெருமான் தீயவர்களுக்கும் அருள் புரிந்து அவர்களுக்கு நன்மைகளை தருகிறார். பல தீய பழக்கங்களுக்கும் அடிமையான அருணகிரிநாதர் தனது தவற்றை உணர்ந்து கொண்டப் பின் ஆலய கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆனால் அவரைக் காப்பாற்றிய முருகன், அவருக்கு திருநீறையும், ஜெப மாலையும் தந்தார் (திருப்புகழ் v. 106). அதன்பின் அருணகிரி முருகனின் அனைத்து தலங்களுக்கும் விஜயம் செய்து அவரை துதித்து திருப்புகழ் மற்றும் பல பாடல்களைப் பாடினார். அதற்கு முன்னால் அவருக்கு தனது புனித பாதங்களை முருகப் பெருமான் ஸ்வாமிமலை ஆலயத்தில் காட்டினார் (திருப்புகழ் v. 199).

5. குமரகுருபரர்
                        இவர் ஐந்து வயதானவரை ஊமையாக இருந்தார். ஆகவே அவருடைய பெற்றோர்கள் அவரை திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று ஆறுமுகனை வேண்டினார்கள். அதன் பின் அவருக்கு பேச்சு வந்துவிட்டது. அதன் பின் பல ஆலயங்களுக்கும் விஜயம் செய்த அவர் முருகன் மீது கந்தர்கலி வெண்பா மற்றும் வேறு பல பாடல்களைப் பாடி உள்ளார். அவர் வாரணாசியில் சைவ மடத்தை நிறுவி சைவ சித்தாந்தத்தைப் பரப்பியவர். அவரைப் பொறுத்தவரை முருகனை அவர் குழந்தையாகவே பார்த்தவர். முத்துகுமாரஸ்வாமி பிள்ளைத் தமிழ் என்ற பாடலை இயற்றினார்.

6. பாம்பன் சுவாமிகள்
                                   1923 ஆம் ஆண்டு அவர் ஒரு விபத்தில் சிக்கி இடது கணுக்கால் முட்டியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் சென்றதும், அவரது முறிந்து விட்ட கணுக்காலை மருத்துவத்தினால் நிவாரணம் செய்ய இயலாது என மருத்துவர்கள் கை விட்டு விட்டார்கள். ஆனால் அவர் மனதை தளர விடவில்லை. அவர் தனது பந்தத்தை துறந்து முருக பக்தரானார். முருகனிடம் தனது நோயை நிவர்த்திக்குமாறு வேண்டிக் கொண்டார். மருத்துவ மனையில் இருந்தபோது அவரது இடது கணுக்கால் முட்டியை அங்கு வந்த இரண்டு மயில்கள் வருடிக் கொடுத்தன. அவ்வளவுதான் அவருடைய கால் வலி உடனே நின்றது. அதைத் தவிர முருகன் ஒரு குழந்தையின் உருவில் வந்து தனது வேலினால் அவரது முறிந்து போன காலை தடவி விடுவது போல உணர்ந்தார். அதன் பின் அவர் கால் நல்ல நிலைக்கு வந்துவிட்டது. அவர் பாடிய ஷண்முகக் கவசத்தை பக்தியோடு பாடினால் பல நோய்கள் விலகும், மன பயமும் ஒழியும் என்பது நம்பிக்கை. ஒருமுறை அவருக்கு முருகனே நேரில் காட்சி தந்தார். முருகன் மீது பல பாடல்களை அவர் இயற்றி உள்ளார்.

7. கிருபானந்தவாரியார்

                                     சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்' என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி "கைத்தல நிறைகனி' என்று தொடங்கும் திருப்புகழுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது. சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், அவர் இயற்றியுள்ள நூல் கந்தவேள் கருணை. 
                                      
8. சிகண்டி
                  உண்மையான ஒரு பக்தருக்கு கடவுள் எந்த வகையிலாவது வந்து உதவி புரிவார். சிகண்டி எனும் முனிவர் கதிர்காமத்தில் இருந்தபோது ஒரு மதம் பிடித்த யானை அவரைக் கொல்ல வந்தது. ஆனால் கொஞ்சமும் பயம் அற்ற அந்த முருக பக்தர் வெற்றிலைக் காம்பை கிள்ளி அதன் மீது போட்டார். உடனே அந்த வெற்றிலைக் காம்பு முருகனின் வேலாக மாறி அந்த மதம் பிடித்த யானையைக் கொன்றது. முருகன் மீதான நம்பிக்கையும், பக்தியும் அந்த முனிவரின் உயிரைக் காப்பாற்றியது.

9. ஆதி சங்கரர்
                                                 சைவ சமயத்தை சார்ந்த தத்துவஞானி. சங்கரரின் எதிரியான அபினவ குப்தா என்பவர் சங்கரருக்கு உடல் உபாதைக் கொடுத்து அவரை வேதனைப் படுத்தினார். சிவபெருமான் அவர் கனவில் தோன்றி அவரை திருச்செந்தூரில் உள்ள ஜெயந்திபுரத்துக்கு சென்று அங்கு முருகனை வேண்டுமாறுக் கூறினார். சங்கரரும் ஜெயந்திபுரத்துக்குச் சென்று ஸ்கந்தனை வழிபடத் துவங்கியபோது அங்கு முருகனின் காலடியில் ஆதிசேஷன் விழுந்து வணங்கியதைக் கண்டார். உடனே அவர் பாம்பு போல வளைந்து வளைந்து செல்லும் நிலையில் ஷண்முகரைப் போற்றும் ஷண்முக புஜாங்கம் என்ற பாடலை பட அவருடைய நோய் அவரை விட்டு அகன்றது. ஷண்முக புஜாங்கத்தை ஓதிக் கொண்டு திருநீரை அணிந்து கொண்டால் எப்பேற்பட்ட நோயும் விலகும் என்பது நம்பிக்கை ஆயிற்று.

10.காசியப்ப சிவாச்சாரியார்
                             இவர் தமிழில் கந்தபுராணத்தை இயற்றியவர். இதில் உள்ள முதல் வரிகளை தமது பக்தர்களுக்காக கந்தனே இயற்றினார். சிவாச்சாரியார் இதை இயற்றி வெளியிட்டபோது ஒரு புலவர் எழுந்து அதற்கு எதிர்ப்பை தெரிவிக்க, முருகனே அங்கு தோன்றி அந்த எதிர்ப்பை வலிவிழக்கச் செய்தார். வேலவின் மீது அபார பக்தி கொண்ட சிவாச்சாரியார் இன்றும் மக்களிடையே பிரபலமாகவே இருக்கின்றார்.

11. திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள்
                                                           முருகன் மீதான பல பாடல்களை இயற்றி உள்ளார். அவர் முருகனை ஒரு தாயுள்ளம் படைத்தவராகவும், ஒரு தாயார் எப்படி தமது குழந்தைகளுக்கு அன்பைக் காட்டி வளர்க்கின்றார் என்பதைக் எடுத்துக் கூறி முருகன் மீதான பாடலை பாடி உள்ளார் (திருப்போரூர் சன்னிதி முறை ). மதுரை தமிழ் சங்கத்தில் இருந்த புலவர் ஒருவரின் வம்சாவளியிரான திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள், திருப்போரூர்ரை கண்டு பிடித்து அதை சீர்படுத்தியவர். முன்னர் உண்மையில் அந்த இடம் பனைமரங்கள் அடர்ந்த வனப்பிரதேசமாக இருந்தது. அங்கு ஒரு மண் புற்றில் முருகன் ஸ்வயம்புவாக எழுந்தருளி இருந்தார். திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள் அந்த புற்றில் இருந்த முருகனின் சிலையைக் கண்டுபிடித்து எடுத்து, அங்கு ஆலயத்தை அமைத்து அதில் முருகனின் சிலையை பிரதிஷ்டை செய்தார்.

12. சுப்ரமணிய முனிவர்
                                     இவர் முருக பக்தர் மட்டும் அல்ல, மிகப் பெரிய புலவரும் ஆவார். அவர் முருகனைப் போற்றிப் தணிகை திருவிருத்தம் என்பதைப் பாடி கண் பார்வையை இழந்துவிட்ட ஒரு பக்தருக்கு கண் பார்வை கொடுக்குமாறு முருகனை வேண்டினார். அவர் வேண்டுகோளை ஏற்ற முருகன் அவர் கேட்ட வரத்தை அருளினார்.

13. வள்ளலார்
             இந்த வடலூர் துறவி சமரச சன்மார்கத்தை போதித்தவர். ஞான தேசிகன் என்ற உருவில் வந்த முருகன் இவருக்கு அருள் புரிந்தார். அவர் இயற்றிய திருவருட்பா (ஐந்தாம் திருமுறை, தேவமணிமலை) ஆறுமுகன் மீது அவர் கொண்டு இருந்த பக்தியை எடுத்துக் காட்டி, அவர் பாதத்தில் சரண் அடைந்தால் அடுத்தடுத்த ஜென்மங்களில் நல்லவை நடக்கும் என்பதையும் எடுத்துரைக்கின்றது.

14. தேவராஜா ஸ்வாமிகள்
                               முருகன் பக்தி இயக்கத்திற்கு பெருமை சேர்த்தவர்களில் கந்தர் ஷஷ்டி கவசத்தை இயற்றிய தேவராஜா ஸ்வாமிகளும் ஒருவர். ஸ்கந்தனின் அருளினால் அவருடைய பிரச்சனை தீர்ந்தது. அதை அழகான செய்யுள் போன்றக் கவிதையில் அவர் பாடி உள்ளார். உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தோன்றும் நோய்களின் அடிப்படைக் காரணங்களையும், மனத் துயர்களின் காரணங்களையும் கூறி, அந்த நோய் மற்றும் துன்பங்கள் அனைத்தையும் எப்படி முருகனின் வேல் நிவர்த்திக்கின்றது என்பதை அதில் பாடலாகப் பாடி உள்ளார். அது மட்டும் அல்லாமல் முருகன் எந்தெந்தப் பெயர்களில் வழிபடப்படுகிறார் என்பதையும் கூறி உள்ளார்.

15. வள்ளிமலை ஸ்வாமிகள்
                                           மைசூர் மகராஜரின் சமையல்காரராக இருந்த அர்த்தநாரி என்ற இவர் கடுமையான வாயிற்று வலியினால் அவதிப்பட்டு பழனி ஆண்டவரிடம் சரண் அடைந்து குணம் அடைந்தார். அதன் பின்னர் அவர் திருவண்ணாமலையில் இருந்த சேஷாத்ரி ஸ்வாமிகளிடம் சிஷ்யராகி, அவர் அறிவுறுத்தியபடி வள்ளி மலைக்குச் சென்றார். அங்கு சென்று முருகன் வழிபாட்டு மரபை போதித்தார். அவர் திருப்புகழ் எனும் பாடலைப் பாடி உள்ளார். அவர் எப்போது முருகனை துதித்தாலும், முருகன் அவருக்கு மயிலாக வந்து காட்சி தந்தாராம் . 

16. முத்துஸ்வாமி தீட்சிதர்
                         கர்நாடக பாடல் கீர்த்தனைகளை இயற்றி உள்ள இந்த இசை ஞானிக்கு திருத்தணி ஆலயத்தில் முருகப் பெருமான் சிறுவன் உருவில் காட்சி தந்துள்ளார். அது முதல் அவருடைய கீர்த்தனைகளில் முடிவாக குருகுஹா என்ற வார்த்தைகள் இருக்கும் வகையில் அவற்றை இயற்றினார்.

17. குணசீலர்
            ப்ரிதிவாட்டி பயங்கரன் என்பவர் ஒருமுறை இவரை பாடல் போட்டிக்கு அழைத்தார். குணசீலரும் அதில் வெற்றி அடைய முருகனின் அருளை வேண்டினார். ஆனால் அந்த போட்டியில் அவரே ஆரம்பித்த பாடலை முடிக்க முடியாமல் திணறியபோது, அவரால் புறங்கணிக்கப்பட்ட சிஷ்யர் எனக் கூறிக் கொண்டு அங்கு வந்த ஆட்டிடையன் ஒருவர் அதை முடித்துக் கொடுத்தார். அந்த சிஷ்யரின் வாதத் திறமையை பார்த்த பயங்கரன், சிஷ்யரின் திறமையே இப்படி உள்ளது என்றால், குரு இன்னும் எத்தனை திறமையாக இருப்பார் என எண்ணி பயந்து கொண்டு குணசீலரின் போட்டியில் இருந்து விலகிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். அதன் பின்னரே குணசீலர் அங்கு வந்து தன்னைக் காப்பாற்றியது முருகனே என்பதை உணர்ந்து கொண்டார்.

18. பகழிகுட்டர்
                  இவர் ஒரு வைஷ்ணவராக இருந்தாலும், முருக பக்தி மிக்கவர். அவருக்கு ஒருமுறை தீராத வாயிற்று வலி வந்தபோது திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்ப் பாடலை பாட அவருடைய வயிற்று வலி நின்றது. அந்த காலத்தில் சைவர்கள் மற்றும் வைஷ்ணவர்களிடையே கருத்து வேற்றுமை ஓயாது இருந்து கொண்டு இருந்ததினால், முருகனிடம் பக்தி கொண்டு இருந்த இவரை வைஷணவர்கள் மதிக்காமல் இருந்தார்கள். ஆனால் முருகன் தன்னுடைய பக்தரை அந்த நிலையில் இருக்க விடவில்லை. அவருடைய பக்தியின் மேன்மையை உலகிற்குக் காட்ட விரும்பினார். ஆகவே ஆலயத்தில் தன்னுடையக் கழுத்திலிருந்த மாணிக்க மாலையை பகழிகுட்டரின் கழுத்தில் விழ வைத்தார். ஆலயத்தில் அதைக் காணாமால் தேடிய அதிகாரிகள் அந்த மாலை பகழிகுட்டரின் கழுத்தில் இருந்ததைக் கண்டு தம்முடைய தவறை உணர்ந்து அதுமுதல் பகழிகுட்டருக்கு தகுந்த மரியாதையை தந்தார்கள்.

19. சிதம்பர முனிவர்
                           17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சிதம்பர முனிவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த சிவஞான யோகி என்பவருடைய சிஷ்யராக இருந்தார். அவருடைய நோயை ஆறுமுகப் பெருமான் தீர்த்து வைத்தார் (ஷேத்திரகோவை பிள்ளை தமிழ்). முருகனைக் குறித்து நிறையப் பாடல்களை அவர் இயற்றி உள்ளார்.

20. பொய்யாமொழிப் புலவர்
                         சிவபெருமானின் பெரும் பக்தரான பொய்யாமொழிப் புலவர் என்பவர் ஒருமுறை, தான் பாடினால் சிவனை மட்டுமே போற்றிப் பாடுவேன் என்று கூறி விட்டு முருகனைப் போற்றிப் பாட மறுத்தார். ஆகவே முருகப் பெருமான் ஒரு வேடன் வேடத்தில் வந்து அந்த முனிவரிடம் சிவனும் முருகனும் ஒருவரே என்றும் அவர்களுக்குள் வித்தியாசம் இல்லை என்றும் எடுத்துக் கூறி அவருடைய அகந்தையை அழித்தார் 

பெயர்கள்


  • சேயோன் - சேய் என்றால் குழந்தை அல்லது மகன் என்பதாகும் முருகன் குழந்தையாக காட்சி அளிப்பாதால் இந்த பெயர் காரணம்
  • அயிலவன் - வேற்படைஉடையவன், முருகக்கடவுள்.

  • ஆறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.
  • முருகன் - அழகுடையவன் அல்லது அனைத்து சக்திகளையும் பெற்ற முழு முதற் கடவுள் என்பதன் அர்த்தம் .

  • குமரன் - குமர பருவத்தில் கடவுளாக எழுந்தருளியிருப்பவன்.
  • குகன் - அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவன் .
  • காங்கேயன் - கங்கையால் தாங்கப்பட்டவன் அல்லது கங்கையின் மகன் என்றும் பொருளாகும்
  • வேலூரவன் - வள்ளியை மணந்ததாலும், அசுரர்களை அழிக்க முதன் முதலில் வேல் கொண்டு தோன்றியதாலும் வேலூரான் என பெயர் பெற்றார் முருகப்பெருமான். அவ்விடம் தான் இன்று தமிழகத்தில் உள்ள வேலூர். வேலூரை சுற்றிலும் குன்றுகளும் குமரனின் கோவில்களாகவே காணப்படுகின்றன. வேலூர் - வள்ளிமலை என்ற இடத்தில் தான் வள்ளியை முருகன் மணந்தார்.
  • சரவணன் - சரவணப்பொய்கையில் (சரவணபவ குளத்தில்) தோன்றியவன்.
  • சேனாதிபதி - சேனைகளின் தலைவன் அல்லது (சேனை நாயகன்)
  • வேலன் - வேலினை ஏந்தியவன்.
  • சுவாமிநாதன் - தந்தைக்கு பிரணவ மந்திரத்தை குருவாக உபதேசம் செய்தவன்.
  • கந்தன் - சிவபெருமாளின் நெற்றிகண்ணீல் இருந்து வெளிபட்ட தீ பொறி பொற்றாமரை குளத்தில் உள்ள தாமரை மலரின் நடுவே உள்ள கந்தகத்தில் பட்டதால் முருகன் குழந்தையாக தொன்றியதால் கந்தகமூலவன் அல்லது கந்தன் என்று பெயர்

  • கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் பாலுட்டி சீராட்டி வளர்க்கப்பட்டவன்.
  • சண்முகன் - ஆறு முகங்களை ஒன்றாக அன்னை பராசக்தி சேர்த்து அழகுமுகமாக ஆனதால் சண்முகம் அல்லது திருமுகம் எனப்படுகிறது.
  • தண்டாயுதபாணி - தண்டாயுதத்தை ஏந்தியவன் அல்லது (பண்டார நாயகன்)
  • வடிவேலன் - வேலை ஏந்திய அழகிய முருகனை இத்திருபெயரால் அழைப்பார்கள்.
  • சுப்ரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன். அல்லது இனியவன் என்றும் பொருளாகும்.
  • மயில்வாகனன் - மயிலை தனது வாகனமாக கொண்டவன்.
  • ஆறுபடை வீடுடையோன் - முருகனின் சாதனை புரிந்த இடங்களை கோவிலாக மறுவி அதை ஆறுபடையப்பன் என்ற பெயரும் உள்ளது.
  • வள்ளற்பெருமாள் - வள்ளியை மணந்ததாலும் அல்லது தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருளை கொடையாக வாரி வழங்குவதால் இப்பெயர் காரணம்
  • சோமாஸ்கந்தன் - சோமன் என்றால் நிலா என்றும் அல்லது (சிவபெருமாள்) மதுரையாம்பதி சோமசுந்தர கடவுளின் மகன் என்பதாகும்
  • முத்தையன் - முத்துகுமாரசுவாமி, முத்துவேலர்சுவாமி ஆகிய பெயர்களின் சுருக்கமான பெயர் ஆகும்.
  • சேந்தன் - தன்னை வணங்கும் பக்தர்களை இன வெறுபாடின்றி ஒன்றினைந்து சேர்த்து வைப்பதால் சேந்தன் என பெயர்.
  • விசாகன் - முருகன் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் என பெயர் ஏற்பட்டது.
  • சுரேஷன் - வட மாநிலங்களில் அழகுக்கு சுரேசன் என்று பொருள் முருகன் அழகுக்கு அதிபதி என்பதாலும் இப்பெயர் ஏற்பட்டது.
  • செவ்வேல் - சேவல்வேல் என்பதை மறுவி கால போக்கில் செவ்வேல் என மாறியது.
  • கடம்பன் - சிவகணங்களில் ஒருவனான கடம்பனை முருகன் தனது உதவியாளனாக சேர்த்து கொண்டதால் இப்பெயர் ஏற்பட்டது.
  • சிவகுமரன் - சிவபெருமாளின் திருமகன் அல்லது சிவனின் குமரன் என்பதேயாகும்.
  • வேலாயுதன் - முருகன் தனது கையில் இருக்கும் வேலயே ஆயுதமாக கொண்டுள்ளதால் இப்பெயர் ஏற்பட்டது.
  • ஆண்டியப்பன் - ஞானபழம் கிடைக்காமல் ஏமாந்த நிலையில் கோமண ஆண்டியாக நின்றவன்.
  • கந்தசாமி - தாமரை மலரின் கந்தகத்தில் இருந்து தொன்றிய கடவுள் என்பதால் கந்தகடவுள் அல்லது கந்தசாமி என பெயர் ஏற்பட்டது.
  • செந்தில்நாதன் - சிந்தனைசிற்பி என்றும் சிந்தனைநாதன் என்பதை மறுவி செந்தில்நாதன் ஆக மாறியது அதாவது முருகன் தனது உயர் சிந்தனையால் சூரபத்மனை அழித்ததால் இப்பெயர் ஏற்பட்டது
  • வேந்தன் - மலை அரசன் , மலை வேந்தன்
  • விசாகம் நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.
  • அக்கினியில் தோன்றியதால் அக்னி புத்திரன்
  • கங்கை தன் கரங்களால் சிவபெருமாளின் நெற்றிகண்ணீல் இருந்து வெளிபட்ட தீப்பிழம்பின் கருவில் தொன்றிய குழந்தை முருகனை ஏந்தியதால் காங்கேயன்.
  • சரவண பொய்கையில் பிறந்ததால் சரவணபவன்/சரவணமூர்த்தி.
  • கார்த்திகை பெண்களிடம் வளர்ந்ததால் கார்த்திகேயன்.
  • தாமரை மலரின் கந்தகத்தில் தொன்றியதால் கந்தன்
  • ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன்
  • ஆறுமுகங்களையும் ஒன்றாக அன்னை பராசக்தி இணைத்து ஒருவராக மாற்றியதால் சண்முகம் / திருமுகம்
இவ்வாறு தமிழ்க்கடவுள் முருகன் பெயர்கள் அனைத்திற்கு பின்பு ஒரு அர்த்தம் ஒளிந்துள்ளது.
  • திருப்பரங்குன்றம் - சூரபத்மனை போரில் வென்றபின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
  • திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.

  • பழநி - மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
  • சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.
  • திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
  • பழமுதிர்சோலை - ஔவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது. வைகைப் பொன்மலை என்கிற செம்மறி கடாவை அடக்கிய தலம் அனுமனுக்கு அருள்புரிந்தது.


* முருகன் தோன்றிய நாள் = வைகாசி விசாகம்


* அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை


* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப்பூசம்


* அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசியில் சஷ்டி


* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனி உத்திரம்


           குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என குன்றுகள் தோறும் கோயில்களைக் கொண்டுள்ளார். 

           முருகன் கோவில்கள், முருக வழிபாடு தமிழ்நாட்டில் மிகவும் அதிகம் காணப்படுகின்றது. வடபழனி முருகன் கோவில், தேனாம்பேட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோவில், மயிலை சிங்காரவேலன், பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவில், குமரக்குன்று, கந்தகோட்டம், குன்றத்தூர் என தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோவில்கள் பல அமைந்துள்ளன.


          மலேசியா நாட்டில் பத்து குகையில் சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது. தைப்பூசம் முதலிய திருவிழாக்கள் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.