Saturday, May 23, 2020

பிளையார் - விநாயகர்


     விநாயகர் முழுமுதற் கடவுள். 



1.       தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்ட பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள். 
        சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார். அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள். அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். 
  ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள். அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.
     விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார்.
        அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.

 2.          சிவமகா புராணத்தில் உள்ள கதை பரவலாக அறியப்படுகிறது. அதன்படி முற்காலத்தில் யானை முகம் கொண்ட கஜாசுரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி பல வருடங்களாக கடுந்தவம் புரிந்தான். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்து வேண்டிய வரம் கேட்குமாறு கூறுகிறார். அதற்கு கஜாசுரன், தன் வயிற்றில் சிவபெருமான் லிங்க வடிவில் தங்கியிருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப் பெற்றார். இதை அறிந்து கலக்கமடைந்த பார்வதி தேவி, தன் அண்ணன் விஷ்ணுவிடம் உதவி கோரினார்.
             பிறகு விஷ்ணு மற்றும் நந்தி ஆகிய இருவரும் தெருக்கூத்து நடத்துபவர்கள் போன்ற உருவம் கொண்டு கஜாசுரனின் அரண்மனைக்கு வந்தனர். நந்தியின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த கஜாசுரன், அவர் வேண்டுவதை அளிப்பதாக வாக்களிக்கிறான். அதற்கு நந்தி அவனிடம் சிவபெருமானை விடுவிக்குமாறு கேட்கிறார். கஜாசுரனும் தான் கொடுத்த வாக்கின்படி சிவபெருமானை விடுவித்தான். அவன் சிவபெருமானை நோக்கி பிரபஞ்சத்தில் தன் நினைவு என்றும் அழியாமல் நிலைக்க வேண்டும் என்று வேண்டுகிறான். 
            அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், கஜாசுரனின் யானைத் தலையைக் கொய்து அவரைப் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கிறார். மேலும் அவனது யானைத் தோலை உடுத்திக் கொண்டு கஜசம்ஹார மூர்த்தியாக காட்சியளித்தார். பிறகு சிவபெருமான் தன் வாகனமான நந்தியில் அமர்ந்து கொண்டு கயிலாயம் வருகிறார.
            சிவபெருமான் கயிலாயம் வந்து கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்த பார்வதி, அவரை வரவேற்கும் முன்பு தயாராக நினைத்தார். ஆனால் அப்போது நந்தி இல்லாததால் அங்கு வாயிற்காவலர் யாரும் இருக்கவில்லை. எனவே பார்வதி தாம் குளிக்கும் முன்பு மஞ்சள் விழுதால் ஒரு சிறுவனைச் செய்து அதற்கு உயிர் கொடுத்தார். அவனுக்கு விக்னங்களைத் தீர்ப்பவன் என்ற பொருளில் விநாயகர் என்ற பெயர் சூட்டினார். மேலும் தான் தயாராகி வரும் வரை ஒருவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரிடம் அறிவுறுத்துகிறார். விநாயகரும் அவ்வாறே செய்வதாக வாக்களிக்கிறான். 
             பிறகு கயிலாயம் வந்தடைந்த சிவபெருமானை விநாயகர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபெருமான் தன் திரிசூலத்தால் விநாயகரின் தலையைக் கொய்தார். பிறகு நடந்நதை அறிந்து கோபம் கொண்ட பார்வதி, பிரபஞ்சத்தையே அழிக்க முடிவெடுத்தார். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பிரம்மதேவர் வேண்டிக் கொண்டார். 
             அதற்கு பார்வதி, விநாயகரை உயிர்த்தெழச் செய்ய வேண்டும் மற்றும் விநாயகரையே அனைவரும் முழுமுதற் கடவுளாக வணங்க வேண்டும் என்று இரு நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், வடக்கில் தலை வைத்து இறந்த நிலையில் படுத்திருக்குமாறு முதலில் தென்படும் உயிரினத்தின் தலையைக் கொய்து எடுத்து வருமாறு சிவகணங்களை அனுப்பினார். 
             அதன்படி சிவகணங்கள் கஜாசுரனின் தலையுடன் திரும்பி வந்தனர். அதை விநாயகரின் உடலோடு பொருத்தினார் பிரம்மதேவர். பிறகு விநாயகருக்கு உயிரளித்த சிவபெருமான், அவனுக்கு முழுமுதற் கடவுள் என்ற பட்டமும் கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி, பிள்ளையார் என்றும் பெயரையும் வழங்கினார். விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்
            கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வட்டெழுத்துப் பொறிப்புகளுடன் விநாயகர் சிலை திண்டிவனத்தருகே ஆலகிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.

விநாயகரின் வேறு பெயர்கள்

  1. கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
  2. ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
  3.  கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
  4. விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்.
  5. சுகர் - அழகிய முகம் கொண்டவர்
  6. ஏகதந்தர் - ஒற்றைத் தந்தம் கொண்டவர்
  7. கபிலர் - பழுப்பு நிறமானவர்
  8. கஜகர்ணர் - யானை காது கொண்டவர்
  9. லம்போதரர் - பெரிய வயிறு உடையவர்
  10. விகடன் - புத்திக்கூர்மை மிக்கவர்
  11. விக்னராஜர் - தடைகளை அகற்றுபவர் அல்லது அழிப்பவர்
  12. விநாயகர் - மேலான தலைவர்
  13. துமகேது - அசுரன் தாமோதரனை வென்றவர்
  14. கணாத்யட்சர் - பூதகணங்களுக்கு எல்லாம் தலைவர்
  15. பாலச்சந்திரர் - பிறை சந்திரனை சூடியவர்
  16. கஜானனர் - யானை முகம் கொண்டவர்
  17. வக்ரதுண்டர் - வளைந்த துதிக்கை கொண்டவர்
  18. சூர்ப்பகர்ணர் - முறம் போன்ற காது கொண்டவர்
  19. ஹேரம்பர் - ஐந்து முகங்களை கொண்டவர்
  20. ஸ்கந்த பூர்வஜர் - கந்தன் எனும் முருகனுக்கு முன் பிறந்தவர்

திருவடி

ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.

பெருவயிறு

ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.

ஐந்துகரங்கள்

பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.எனவே, இவா் ருத்ரா் ஆகிறார் மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே,இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்

கொம்புகள்

மகாபாரதத்தை எழுதுவதற்காக தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது.

தாழ்செவி

விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.

விநாயக மூர்த்தங்கள்


1. பால கணபதி :குழந்தை போன்ற உருவத்தில், செங்கதிர் நிறத்தில் காட்சி தரக்கூடியவர். இவர் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பலம், கரும்பு ஆகியவற்ற தன் நான்கு திருக்கரங்களில் தாங்கியவர்.

2. தருண கணபதி
சிவந்த திருமேனியை கொண்ட தருண கணபதி, அங்குசம், பாசம், ஒடிந்த தந்தம், கரும்புத் துண்டு, நெற்கதிர்கள், மோதகம், விளாம்பழம், நாவற்பழம் ஆகியவற்றை தன் 8 கரங்களில் ஏந்தியவர்.

3. பக்தி கணபதிவெள்ளை நிறத்தில் காணப்படும் பக்தி கணபதி, தனது நான்கு திருக்கரங்களில் பாயாசக் கிண்ணம், தேங்காய், மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றை வைத்திருப்பார்.

4. வீர கணபதி:சிவந்த திருமேனியுடன் காணப்படும் வீர கணபதி, தன்னுடைய 16 திருக்கரங்களில் வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகிய பதினாறு பொருட்களை திருக்கரங்களிலும் ஏந்தியிருப்பார்.

5. சக்தி கணபதி :அந்தி வானம் போல சிவந்த மேனியுடன் இருக்கும் சக்தி கணபதி, தன் மடியில் பச்சை நிறத்திலான தேவியை, ஒரு கையால் இருப்பில் தேவியை அனைத்திருப்பது போலவும், மற்ற கைகளில் அபய ஹஸ்தம் , பாசம், பூமாலை ஆகியவற்றை தாங்கியவர்.

6. துவிஜ கணபதி :வெண்மையான திருமேனியை உடைய துவிஜ கணபதி, நான்கு முகங்கள், புத்தகம், அட்சமாலை, கமண்டலம், தண்டம் ஆகியவற்றை தன் கரங்களில் தாங்கியவர்.


7. சித்தி கணபதி :பொன் மற்றும் பசுமை நிறம் கலந்த சித்தி விநாயகர், தன் 4 திருக்கரங்களில் பரசு, பூங்கொத்து, எள்ளுருண்டை, மாம்பழம் ஆகியவற்றையும், தன் துதிக்கையில் மோதகத்தை தாங்கி இருப்பார்.

8. உச்சிஷ்ட கணபதி ;நீல நிறத்தில் காட்சி அளிக்கும் உச்சிஷ்ட கணபதி, தன் 6 திருக்கரங்களில் இரண்டில் நீலோத்பவ மலர்களும், மாதுளம் பழம், நெற்கதி, அட்சமாலை, வீணை ஆகியவற்றை தாங்கி இருப்பார்.
அதோடு தான் காம மோகிதராக, பெண்ணின் மேனியில் தன் துதிக்கையை வைத்து காணப்படுவார்.


9. விக்ன கணபதி :தங்க நிறத்தை உடைய விக்ன கணபதி, தனது 10 திருக்கரங்களில் சக்கரம், சங்கு, கோடாரி, ஒடிந்த தந்தம், பாணம், கரும்பு வில், பூங்கொத்து, புஷ்ப பாணம், பாசம், மாலை ஆகியவற்றுடன் காணப்படுகின்றார்.

10. ஷிப்ர கணபதிசெந்நிறத்தில் இருக்கும் ஷிப்ர கணபதி, தன் கைகளில் ஒடிந்த தந்தம், கற்பகக் கொடி, பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் 4 திருக்கரங்களில் ஏந்தி ரத்ன கும்பத்தை துதிக்கையில் கொண்டிருப்பார்.

11. ஹேரம்ப கணபதிஐந்து முகங்களை கொண்ட ஹேரம்ப கணபதி, தனது 10 கரங்களில் இரண்டு அபய மற்றும் வரத முத்திரையோடும், இதர கரங்களில் பாசம், பரசு, சம்மட்டி, தந்தம், மாலை, அட்சமாலை மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார்.


12. லட்சுமி கணபதிவெள்ளை நிறத்தில் இருக்கும் லட்சுமி கணபதி, நீல நிற தாமரைப் பூவை தனது கையில் ஏந்தி, இரு தேவிகளுடன் காணப்படுவார். தனது 8 திருக்கரங்களில் கலசம், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, கட்சம், வரதம், கிளி, மாதுளம் பழம் ஆகியவற்றை கொண்டிருப்பார்.

13. மகா கணபதிசெந்நிற திருமேனியுடன் காணப்படும் மகா கணபதி, 10 கைகளையும், மூன்று கண்களையும், ட்தன் முடியில் பிறைச்சந்திரனும் உடையவர். தாமரை மலரை ஏந்திய தேவி, இடது தொடையில் தேவியை அமரவைத்து, தனது கையால் அனைத்து இருப்பார். மற்ற கரங்களில் கதை, கரும்பு, வில், சக்கர, பாச, தந்தம், ரத்ன கலசம், நெற்கதி, நீலோத்பலம், மாதுளை ஆகியவற்றை ஏந்தி இருப்பார்.

14. விஜய கணபதிபெருச்சாளி வாகனத்தில் அமர்ந்திருக்கும் விஜய கணபதி, பாசம், அங்குசம், ஒடிந்த தந்தம், மாம்பழம் ஆகியவற்றை தன் 4 கரங்களில் ஏந்தியிருப்பார்.

15. நிருத்த கணபதிபொன் நிற மேனியுடைய நிருத்த கணபதி, ஆறு திருக்கரங்களையும், அதில் மோதிரங்கள் அணிந்த கரங்களில், அங்குசம்,ம் பாசம். அபூபம், கோடாரி, தந்தம் ஆகியவற்றைத் ஏந்தி, கற்பக விருட்சத்தின் கீழ் அமர்ந்திருப்பார். இந்த கணபதியை கூத்தாடும் பிள்ளையார் எனவும் அழைப்பதுண்டு.

16. ஊர்த்துவ கணபதிதங்கம் போல் ஜொலிக்கும் ஊர்த்துவ கணபதி, தாமரை மலர்களை தன் கரங்களில் தாங்கி, பச்சை நிற மேனி தேவையை அணைத்தவாறு, தந்தம், பாணம், தாமரை, கரும்பு வில், நீல புஷ்பம் ஆகியவற்றை ஏந்தி இருப்பார்.


17. ஏகாட்சர கணபதிசெந்நிறமாக இருக்கும் ஏகாட்ச கணபதி, செந்நிற உடை, செம்மலர் மாலையை அணிந்து, பெருச்சாளி வாகனத்தின் மீது பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். மூன்று கண்களும், முடியில் பிறைச்சந்திரனை சூடியும் இருப்பார்.

18. வர கணபதிசிவந்த திருமேனியை உடைய வர கணபதி, தனது நான்கு கரங்களில் பாசம், அங்குசம், அமுதக்கிண்ணம் மற்றும் கொடியை தாங்கி இருப்பார். பிறை சூடிய இவருக்கு மூன்று நேத்திரங்கள் உண்டு.

19. திரயாக்ஷர கணபதிபொன்னிற மேனியில் இருக்கும்திரயாக்‌ஷர கணபதி, பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை தனது நான்கு கரங்களிலும், மோதகத்தை தும்பிக்கையிலும் தாங்கியிருக்கிறார்.


20. க்ஷிப்ரபிரசாத கணபதிபெரிய வயிற்றினை கொண்ட க்ஷிப்ரபிரசாத கணபதி, ஆபரணங்களை சூடி, ஆறு திருக்கரங்களில், பாசம், அங்குசம், தாமரை, தர்ப்பை ஆகியவற்றை ஏந்தியதோடு, ஒரு கரத்தில் ஹஸ்த முத்திரையையும், துதிக்கையில் மாதுளம் பழத்தையும் கொண்டவர்.

21.ஹரித்ரா கணபதிமஞ்சள் நிறத்தில் இருக்கும் ஹரித்ரா கணபதி, பாசம், அங்குசம், தந்தம், மோதகம் ஆகியவற்றை, 4 திருக்கரங்களில் ஏந்தி இருப்பார்.

22. ஏகதந்தி கணபதிநீல நிற மேனியான ஏகாந்த கணபதி பெரிய வயிறு கொண்டிருப்பார். கோடரி, அட்சமாலை, தந்தம், லட்டு ஆகியவற்றை, நான்கு திருக்கரங்களில் ஏந்தி காணப்படுகிறார்.


23. சிருஷ்டி கணபதிசிவந்த மேனியுடன் இருக்கும் சிருஷ்டி கண்பதி தன் 4 கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் இவற்றைத் ஏந்தியவர். பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கிறார்.

24. உத்தண்ட கணபதிதனது பத்து திருக்கரங்களில்பாசம், நீல புஷ்பம், தாமரை, தந்தம், கரும்பு வில், கதை, ரத்ன கலசம், நெற்கதிர், மாதுளம் பழம், மாலை ஆகியவைகளை வைத்திருப்பார். இடது தொடையில், பச்சை நிற மேனி தேவியை ஏற்றிருப்பவர்.

25. ரணமோசன கணபதிவெண்பளிங்கு மேனியுடன் இருக்கும் ரணமோசன கணபதி, செந்நிறப் பட்டாடை உடுத்தி இருப்பார். தன் கரங்களில், பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் இவற்றைத் தாங்கி காணப்படுகிறார்.


26. துண்டி கணபதிநான்கு திருக்கரங்களில், அட்சமாலை, கோடரி, ரத்ன கலசம், ஒடிந்த தந்தம் இவைகளோடு அருள் பாலிக்கிறார். காசி க்ஷேத்திரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவர்.

27. துவிமுக கணபதிஇரண்டு முகங்களை கொண்ட துவிமுக கணபதி, பசுமையான நீல நிற கொண்டவர். செம்பட்டாடை உடுத்தி, தந்தம், பாசம், அங்குசம், ரத்ன பாத்திரத்தை ஆகியவற்றை நான்கு திருக்கரங்களில் ஏந்தியவர்.

28. மும்முக கணபதிமூன்று முகத்துடன் பொற்றாமரை ஆசனத்தில் காணப்படுபவர். சிவந்த மேனியை உடைய இவர், பாசம், அங்குசம், அட்சமாலை, அமுத கலசம், அபய, ஹஸ்த முத்திரைகளைத் தாங்கி காட்சி தருகிறார்.


29. சிங்க கணபதிசிங்க வாகனத்தில் எழுந்தருளி இருக்கும் சிங்க கணபதி வெண்மையான நிறத்தில் இருப்பதோடு தனது இரண்டு திருக்கரங்களில் வரதம், அபயம் முத்திரைகளையும், ஆறு திருக்கரங்களில், கற்பகக் கொடி, வீணை, சிங்கம், தாமரை, பூங்கொத்து, ரத்ன கலசத்தை தாங்கியவர்.

30. யோக கணபதிசெஞ்சூரியன் நிறத்தில், நீல நிற ஆடையை தரித்த இவர், பாசம், அட்சமாலை, யோகதண்டம், கரும்பு ஆகியவைகளைத் ஏந்தி, யோக நிலையில் தோற்றமளிக்கிறார்.

31. துர்க்கா கணபதிபசும் பொன் நிறத்தில் இருக்கும் துர்கா கணபதி,தன் 8 திருக்கரங்களில் அங்குசம், பாசம், பாணம், அட்சமாலை, தந்தம், வில், கொடி, நாவற்பழம் ஆகியவற்றைத் தாங்கி பெரிய உருவத்துடன் காணப்படுபவர்.


32. சங்கட ஹர கணபதிஇளஞ்சூரியன் நிறத்த்தில், தன் இடது தொடையில் நீல நிற பூவை ஏந்திய தேவியை வைத்திருப்பார். நீல நிற ஆடை அணிந்து, செந்தாமரை பீடத்தில் அமர்ந்து வரத முத்திரையுடன், அங்குசம், பாசம், பாயசக் கிண்ணத்தினைத் தாங்கி அருள் பாலிப்பவர்.

வருடந்தோறும் ஆவணி மாதம் வளர்பிறைச்சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி.

துர்வா கணபதி விரதம், துர்வா யுக்மம் எனும் சொல்லானது அருகம்புல்லைக் குறிப்பதாகும். விநாயகருக்கு விரதம் இருந்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்வதும், மாலையிடுவதும் இந்நாளில் செய்யப்படுகிறது.

ஔவையார் விநாயகர் மேல் பாடிய அகவல் ’சீதக்களப செந்தாமரை.." எனத்துவங்கும் விநாயகர் அகவல்.விநாயகர் அகவலைத் தினமும் பாராயணம் செய்துவருவோரைத் தீவினை நெருங்காது, நல்லதே நடக்கும் என்பது தொன்நம்பிக்கை.

கணேச பஞ்சரத்னம் ஆதிசங்கரர் இயற்றிய, விநாயகப்பெருமானை வழிபடும் சுலோகம்.
அரசமரத்தடி, குளக்கரை முச்சந்தி நாற்சந்தி தெருமுனை என வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி பிள்ளையார்தான்.

புருசுண்டி முனிவர், விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர். அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.
               
விநாயகர் மக்கள் கோரிய கோரிக்கைகளை சித்திக்க அதாவது வெற்றிகரமாக நிறைவேற வைப்பவர் என்றும், நல்ல புத்தியைக் கொடுப்பவரென்றும் எல்லாரும் கொண்டாடுவர். இந்த சித்தியையும் புத்தியையும் பெண்களாகக் கருதி இவை விநாயகரின் மனைவியர் என்றுக் கூறுவர். இப்படித்தன் மனைவிகளான சித்தியோடும் புத்தியோடும் சேர்ந்து காட்சி தரும் விநாயகப் பெருமானே சித்தி புத்தி விநாயகர் ஆவார்.

சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது. வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று.

முதன் முதலாக விநாயகருக்கு கொழுக் கட்டை படைத்து வழிபட்டவர் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.

சுவாமிமலையில் கொங்கு நாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த கண் கொடுத்த விநாயகர் உள்ளார். கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம்.

வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.

கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருக்க விநாயகரை வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். 

வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி, நாவல், வாகை ஆகிய ஒன்பது விருட்சகங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம், பொதுவாக மேற்குரிய மரங்கள் எல்லாம் மருத்துவக்குணம் வாய்ந்தவை. புத்திரப் பேறுக்காக இம்மரங்களை சுற்றி வந்து வணங்குவது நல்லது.

அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும், செல்வத்தையும், உடற்சுகத்தையும் அருள்பவர் ரண மோட்சக்கணபதி ஆவார். 

சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் கோவிலில் ஆதியந்த பிரபு விநாயகர் அமர்ந்திருக்கிறார். இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான அமைப்பாகும். இவருக்கு நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்த கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.

விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.  விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு.

விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் பவானியில் காணலாம். விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில் காணலாம். கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயகப் பெருமான் சங்கரன் கோவிலில் காட்சி தருகிறார். 

தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவருக்கு சிலம்பணி விநாயகர் என்ற பெயர். திருப்பரங்குன்றம் குடவரைக் கோவிலில் விநாயகர் கையில் கரும்புடன் காட்சி தருகிறார்.  தஞ்சாவூர் சக்கரபாணி கோவிலில் விநாயகர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். பிள்ளையார் பட்டியில் உள்ள விநாயகர் தன் ஒரு கரத்தில் சிவ லிங்கத்தை ஏந்தி இருப்பதை சிறப்பானது.

யானை முகமும் புலிக்கால்களும் பெண்ணின் மார்பும் உடைய விநாயகர் வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுவார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத் தூணிலும், நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் உள்ள தூணிலும் காட்சி தருகிறார்.

வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இவர்கள் தோன்றிய வடிவம் ஓம்கார வடிவத்தில் உள்ளது. புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார்.

நரமுக விநாயகருக்கு திருக்கோவில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும்தான் இருக்கிறது. அவை சிதம்பரம் (தெற்கு வீதியிலும்) திருசெங்காட்டுக்குடியும் ஆகும். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.

கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி கோவிலில் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.

விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத் துடன் பெருமாள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட் ரோட்டில் அம்ருதயுரி என்ற ஊரில் 8 அடி உயரத்தில் பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார். இவரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும்.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தூரில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் பந்தநல்லூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள மரத்துறை கிராமத்தில் இரட்டை விநாயகர் உள்ளார். இந்த இரட்டை விநாயகரை வணங்கினால் விவசாயம் செழிக்கும் என்று விவசாயிகள் நம்புகிறார்கள்.

ஓம் வக்ரதுண்டாய ஹீம் என்பது தான் சட்டாட்சர மந்திரம் இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வணங்கினால் பகை வரை எளிதாக வென்று விடலாம்.

புண்ணியத் தைத்தேடி காசி மாநக ருக்கு செல் பவர்கள் அங்குள்ள அனைத்து விதமாக ஆலய வழிபாட்டுச் சம்பிரதாயங்கள் சடங்குகளை முடித்துக்கொண்டு வரும் போது முடிவில் ஒரு சிறிய ஆலயத்தில் உள்ள டுண்டி ராஜகணபதியை வணங்கினால் தான் யாத்திரை முற்றுப் பெறுவதாக நம்புகின்றனர்.

எந்த ராசியினர் எந்த கணபதியை வணங்கினால் சிறந்தது

1. மேஷம் ராசி:செவ்வாய் ராசி நாதனாக இருக்கும் மனோ தைரியம் மிக்க மேஷ ராசியினர் ‘வீர கணபதி’ வணங்கி வந்தால் சிறப்பு யோகம் கிடைக்கும்.

2. ரிஷபம்:சுக்கிரனின் யோகத்தை ராசி நாதனாக கொண்ட ரிஷப ராசியினர், ராஜராஜேஸ்வரியின் அம்சத்தில் இருக்கும் ‘ ஸ்ரீ வித்யா கணபதி’ யை வணங்கினால் எல்லா வளமும் கிடைக்கும்.


3. மிதுனம்:
புதன் ராசி நாதனாக இருக்கும் பல திறமைகளை தன்னுள் வைத்திருக்கும் மிதுன ராசியினர் ‘லட்சுமி கணபதி’ யை வணங்கினால் அனைத்து யோகங்களும் வந்து சேரும்.

4.கடகம்:சந்திரன் யோகத்தை ராசி நாதனாக கொண்ட, பல கலைகளில் வித்தகராகத் திகழும் கடக ராசியினர், ‘ ஹேரம்ப கணபதி’ யை வணங்குதல் நல்லது.

5. சிம்மம்:
இயற்கையிலேயே மிகவும் தைரிய குணம் கொண்ட, ஆளுமை மிக்க சிம்ம ராசியினர் ‘விஜய கணபதி’ யை வணங்கி வந்தால் வாழ்க்கையில் ஜெயம் தான்.

6. கன்னி :புதன் ராசி நாதனாக கொண்ட கன்னி ராசிக்காரர்கள் தனது வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து செயல்பட்டால் எவராலும் வெல்ல முடியாத அளவிற்கு உயர வாய்ப்புண்டு. இவர்கள் ‘மோகன கணபதி’ யை வழிபட வாழ்க்கை சிறப்பாகும்.

7. துலாம் :
சுக்கிரனை ராசிநாதனாக கொண்ட துலாம் ராசியினர் வானமே எல்லை என பரந்து சிந்தித்து செயல்படுவதில் வல்லவர்கள். இவர்கள் ‘ஷிப்ர ப்ரசாத கணபதி’ யை வணங்கினால் நல்லது.

8. விருச்சிகம் :விருச்சிக ராசிக்கு செவ்வாய் ராசி நாதனாக உள்ளார். சுறுசுறுப்பான, நுண்ணறிவோடு செயல்படக்கூடிய விருச்சிக ராசியினர் ‘சக்தி விநாயகர்’ வழிபட்டு வர எல்லா நலனும் கிடைக்கும்.

9. தனுசு :குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த தனுசு ராசியினர், குரு அருளையும், கணபதி அருளையும் பெற ‘சங்கடஹர கணபதி’ யை வழிபட்டு வாழ்வில் வளம் பெறுங்கள்.

10. மகரம் :நியாயத்தின் நீதிபதியாக, அனைவருக்கும் பொதுவாக செயல்படும் சனி பகவானின் ஆதிக்கத்தில் இருக்கும் மகர ராசியில் பிறந்த இவர்கள், ‘யோக கணபதி’ யை வணங்கி வந்தால் எல்லாம் நன்மையாகும்.

11. கும்பம் :
சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தும், அனைவரையும் அடக்கி ஆள விரும்பும் கும்ப ராசியினர், சித்தி விநாயகரை வணங்கி நல்ல புத்தி பெற்றிருங்கள்.

12. மீனம் :குருவின் ஆதிக்கத்தில் இருக்கும் கள்ளம் கபடம் இல்லாத மீன ராசியினர், ‘பால கணபதி’ யை வணங்கி வாழ்வாங்கு வாழலாம்.

                        நமது மூலா தாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை விழிப்படைய செய்யும் ஆற்றல் விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு.


மற்ற கடவுள்களை விட விநாயகர் பலன்களை முந்தி வந்து தருபவர் ஆவார். எனவேதான் அவரை முந்தி முந்தி விநாயகர் என்கிறார்கள்.

‘வி’ என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்.


No comments:

Post a Comment