Friday, May 22, 2020

சப்த கன்னியர்




            உலகைக் காக்கும் ராஜராஜேஸ்வரியான அன்னை ஆதிபராசக்தியின் அம்சத்தில் இருந்து உருவாக்கப்பட்டவர்கள்தான் சப்தகன்னியர் எனப்படும் ஏழு பெண் தெய்வங்கள். பூலோகத்தில் கடும் நாசச் செயல்களைப் புரிந்து வந்த சண்ட - முண்டர்கள் எனும் இரண்டு அரக்கர்களை அழிப்பதற்காக, தாய் தந்தையரின் மூலமாக கர்ப்பத்தில் உருவாகாமல், அம்பாளின் சக்தி வடிவங்களாக அவதரித்தவர்களே சப்த கன்னியர்கள்.




         ‘பிராம்ஹி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி’ ஆகிய எழுவர்தான் சப்த கன்னிகா தேவிகள். இவர்கள் ‘சப்த மாதர்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றனர். 

        பிராம்ஹி படைப்புக் கடவுளான பிரம்மாவின் அம்சம். மஹேஸ்வரி மகேஸ்வரனாகிய சிவபெருமானின் அம்சம். கெளமாரி, முருகக் கடவுளின் அம்சம் கொண்டவர். வைஷ்ணவி, நாராயணனாகிய விஷ்ணுவின் அம்சம் கொண்டவர்.  வராஹி திருமாலின் வராக அம்சத்தை அடிப்படையாகக் கொண்டவர். சாமுண்டி ருத்ரனின் அம்சமாக வணங்கப்பட்டு வருகிறார். 

பிராம்மி  

           பிரம்மனின் அம்சமாகத் தோன்றிய இந்த கன்னி, சரஸ்வதியின் அம்சமானவள். கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வேண்டுவோர் இவளை வணங்கி அருள் பெறலாம். மூளையின் செயல்களைக் கட்டுப்படுத்தும் பிராம்மி, மேற்கு திசைக்கு அதிபதியாக இருந்து ஆட்சிபுரிகிறாள். தோலுக்கு தலைவி என்பதால் தோல் வியாதிகளைத் தீர்ப்பவள்.

மகேஸ்வரி 

         ஈசனின் அம்சமான இந்த கன்னி கோபத்தை நீக்கி, சாந்த குணத்தை அருளக்கூடியவள். சகல பிரச்னைகளையும் தீர்த்து வைக்கும் இந்த தேவி வடகிழக்கு திசைக்கு
உரியவள். சிவனைப்போலவே தோற்றமும் ஆயுதங்களும் கொண்டவள். மகேஸ்வரி பித்தத்தினை கட்டுப்படுத்தும் வல்லமைகொண்டவள்.

கௌமாரி 

         முருகப்பெருமானின் அம்சமாகத் தோன்றிய கன்னி இவள். சஷ்டி, தேவசேனா என பெயர்கொண்ட இவள், குழந்தை வரம் அருளும் நாயகி. செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், வீடு, மனை தொடர்பான சிக்கல் உள்ளவர்களும் இந்த கன்னியை வணங்கலாம். ரத்தத்துக்கு தலைவி என்பதால் உஷ்ண சம்பந்தமான எந்த வியாதிக்கும் கௌமாரியை வேண்டலாம்.

வைஷ்ணவி 

         திருமாலின் அம்சமாகத் தோன்றிய கன்னி இவள். `நாராயணி’ என்றும் அழைக்கப்படுகிறாள். செல்வ வளம் பெறவும், உற்சாகமாகப் பணியாற்றவும் இவளை வேண்டலாம். விஷக்கடி, கட்டிகள், வீக்கம் போன்ற வியாதிகளைத் தீர்ப்பவள் இந்த தேவி. திருமாலைப் போன்றே சங்கு சக்கரம் ஏந்தி பக்தர்களைக் காப்பவள்.




வராகி 

        வராக மூர்த்தியின் அம்சமாக அவரைப்போலவே தோன்றியவள் இந்த கன்னி. சிவன், விஷ்ணு, சக்தி ஆகியோரின் அம்சமாக இருப்பதால் பெரும் வலிமைகொண்ட இந்த தேவி எதிரிகளை வெல்லவும், தடைகளை அகற்றவும் உதவிசெய்பவள். வராகியை வணங்குபவர்களுக்கு துன்பமே வாராது என்பது மக்களின் நம்பிக்கை.

இந்திராணி 

         இந்திரனின் அம்சமாக அழகே வடிவாகத் தோன்றிய கன்னி இவள். மிகப்பொருத்தமான துணையைத் தேடித்தரும் இந்திராணி மகாலட்சுமியின் அம்சம் என்றும் போற்றப்படுகிறாள். கடன் பிரச்னைகள் தீரவும்,தாம்பத்திய சிக்கல் நீங்கவும் இந்த கன்னியே துணைபுரிகிறாள்.

சாமுண்டி 

       ருத்திரனின் அம்சமாக, பத்திரகாளியின் வடிவமாக முதலில் தோன்றிய கன்னி இவள். எந்தவித மாந்திரீக சக்திக்கும் கட்டுப்படாத இந்த கன்னி, நம்பியவரை காக்கும் பலம்கொண்டவள். எந்தவிதமான பயம் இருந்தாலும், இவளை வேண்டியதும் அது விலகிவிடும். வீரத்துக்குப் பொறுப்பான சாமுண்டி, உடல் பலத்துக்கும் நலத்துக்கும் பொறுப்பானவள்.




No comments:

Post a Comment